×

பாஜவுக்கு மறைமுக ஆதரவு; கர்நாடகா அதிமுக செயலாளர் ராஜினாமா: எடப்பாடியால் முடிவெடுக்க முடியவில்லை என பேட்டி

ஓசூர்: கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு நேற்று வந்த அவர் நிருபர்களை சந்திதார்.

அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து தமிழர்களின் நலன்களை காக்க, அதிமுக பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தும், கடைசி நேரத்தில் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து, வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இந்த முறை நாடாளுமன்ற பொது தேர்தலில், கர்நாடக மாநில அதிமுக சார்பில், அங்குள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட, தலைமை கழகத்திற்கு விருப்ப மனு அளிக்கப்பட்டு நேர்காணலும் நடைபெற்றது. ஆனால், கடைசி நேரத்தில் அங்கு போட்டியிட அதிமுக தலைமை மறுத்து விட்டது.

எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என கேட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, திருப்பத்தூரில் நேரில் சந்தித்து மனு அளித்தோம். எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி தனியாக முடிவெடுக்காமல், கூட்டு தலைமையுடன் பேசி முடிவெடுப்பதாக கூறுகிறார். இதனால் அவர் ஒற்றை தலைமையாக செயல்படுகிறாரா? அல்லது கூட்டு தலைமையுடன் செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கர்நாடகாவில் பாஜவுக்கு மறைமுகமாக அதிமுக ஆதரவு தெரிவிக்கிறதா? என்று அங்குள்ள தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. எனவே, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன். ஆனால், அதிமுகவில் இருந்து நான் விலகவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாஜவுக்கு மறைமுக ஆதரவு; கர்நாடகா அதிமுக செயலாளர் ராஜினாமா: எடப்பாடியால் முடிவெடுக்க முடியவில்லை என பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka AIADMK ,Edappadi ,Hosur ,Karnataka ,State ,AIADMK ,ST Kumar ,Hosur, Krishnagiri district ,Tamils ,MGR ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி...